Translate

Monday, September 26, 2016

போகன் சங்கருக்கு கண்டனம்

போகன் சங்கருக்கு கண்டனம் 

போகன் சங்கர் என்ற எழுத்தாளர் பகடி எழுதுவதாக கூறிக் கொண்டு சிற்றிதழாளர்கள் குறித்து கடுமையானதும், கண்டனத்திற்குரியதுமான பதிவுகளை தன் முக நூலில் இட்டுள்ளார் . 

இந்த பதிவு கடும் கண்டனத்திற்குரியது. 
போகிற போக்கில் சிற்றிதாழாளர்கள் மீது 
புழுதி வாரி இறைப்பதாகவும், அவமானப்படுத்துவதாகவும் உள்ளது. ஒவ்வொரு சிற்றிதழின் பின்னாலும் கடும் உழைப்பும், லாப நோக்கமில்லாத அர்ப்பணிப்பும், தமிழ் மீது கொண்ட காதலும் பின்னி பிணைந்திருக்கிறது. நீங்கள் நினைப்பது போல அவர்கள் உங்களிடம் மடிப் பிச்சை ஏந்தி நிற்பவர்கள் அல்ல. சுழலும் மெத்தையிலிருந்து கொண்டு, சுக போக சங்கராக இருக்கும் உங்களுக்கு பகடி செய்வதற்கும், ஏளனமும், எகத்தாளமும் கலந்த இந்த பதிவை செய்த உங்கள் மன நிலையைக் கண்டு பரிதாபப்படுகின்றேன். இது போல கேவலமான பதிவை போட்டு தங்கள் இருப்பை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமும், உங்களைப் போன்றவர்களிடம் சான்றிதழ் பெற வேண்டிய தேவையும் சிற்றிதழாளகளுக்கு இல்லை. எப்போதும் இருக்கப் போவது இல்லை. 


இதோ இன்று தான் " நிகரன் " என்ற சிற்றிதழாளர், எழுத்தாளர் லட்சுமணப் பெருமாள் பற்றி குறிப்பிட்டுறுந்ததை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். தான் எழுதி வெளியிட்டிருந்த கரிசல் காட்டு கருவூலங்கள் என்ற நூலிலிருந்து சிறு கதைகளை எடுத்து உங்கள் சிற்றிதழ்களுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று தானாகவே கூறிய அவரின் செயல்பாட்டிற்கும், உங்கள் பதிவுக்கும் உள்ள ஒப்பீட்டை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகின்றேன். 100க் கணக்கான சிற்றிதழ்கள் இன்றும் வெளிவந்து கொன்டிருக்கின்றன. 100வது இதழைக் கொண்டுவரும் அழகிய சிங்கரின் " நவீண விருட்சம் ", 50 இதழைக் கொண்டுவந்துள்ள குறிஞ்சி வேலனின் " திசைகள் எட்டும் " என்ற மொழியாக்க காலாண்டிதழ்,28 வருடங்களாக கையெழுத்து பிரதியாக அறந்தாங்கியிலிருந்து வெளிவரும் கோவிந்தராஜனின் " தாழம்பூ" ம் [ ஒரு சாதரண வாடகை மிதி வண்டி நிலையம் நடத்துபவர்], 20 வருடமாக வத்தலக் குண்டுவிலிருந்து வதிலை பிரபா வெளியிடும் " மகா கவியும் ', இன்று 89வது இதழை வெளியிட்டுள்ள திருப்பூர் சுப்ர பாரதி மணியனின் " கனவு " ம் உங்களிடம் கையேந்தி நிற்கின்ற இதழ்களா. அவர்களுடைய அர்ப்பணிப்பிற்கு உங்கள் எழுத்துகள் ஈடாகுமா. நீங்கள் சிற்றிதழாளர்களுக்கு எதிரான நுண்ணரசியல் நடத்துகின்றீர்கள். இது வணிக இதழ்களின் உத்தி. எந்த காலத்திலும் நீங்கள் வெற்றி பெற முடியாது. தினம் தினம் புதுப் புது சிற்றிதழ்கள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. அவைகள் தொடர்ந்து வரவில்லை என்றாலும், அவை இலக்கிய உலகில் ஏற்படுத்தும் தாக்கங்களும், சலனங்களும் தான் முக்கியமானது. உங்களுக்கு வேண்டுமானால் என் முக நூலுக்கு வாருங்கள். 100க் கணக்கான சிற்றிதழ்களின் முகவரிகள் இருக்கின்றன். ஒன்றிண்டையாவது சந்தா கட்டி படித்து பாருங்கள். ஒரு குறிப்பிட்ட துறையினரை பொதுமைப் படுத்தி ஏளனம் செய்த செயல்பாட்டை உங்கள் மனசாட்சிக்கே விட்டுவிடுகின்றேன். நன்றி. வணக்கம். - கிருஷ்.ராமதாஸ், சிற்றிதழ் நலம் விரும்பி.

போகன் சங்கரின் பதில் 
இதைவிட கடும் பகடிகள் சண்டைகள் எல்லாம் சிற்றிதழ்களிலேயே காணக் கிடைக்கின்றன.எல்லா சிற்றிதழ்களையும் பொதுமைப்படுத்துவது நோக்கமில்லை.உங்களுக்கு அறச் சீற்றம் கொள்ள வாய்ப்புகள் தேவை என்பது புரிகிறது.சிற்றித்ழ்களை விற்பது நல்ல விசயம்.கூடவே அவற்றைப் படித்துப் பார்க்கலாம்.

என் பதில் 
வாய்ப்புத் தேடி அலைய வேண்டிய அவசியம் எனக்கில்லை. சிற்றிதழ்களை விற்கும் முகவரும் நான் இல்லை. ஏதோ ஒரு இதழில் இருக்கின்றது என்று கூறி திரும்பவும் உங்கள் பதிவை நியாப்படுத்துகின்றீர்கள். உங்களிடம் விவாதிப்பது பொருளற்றது. நிறைய இதழ்களை படித்து வருகின்றேன். பி .டி.எஃப். வழியாகவும், இணையம் மூலமாகவும் படித்து அவற்றிற்கான தொடர் வெளியீட்டிற்கான உதவி செய்கின்றேன். சிற்றிதழ் ஊக்குவிப்புத்திட்டத்தின் மூலம் கடந்த 15 மாதாங்களில் 30 இதழ்களுக்கு 3 வருட சந்தா அனுப்பி உள்ளேன். வாருங்கள் என் தளத்திற்கு, கடந்த வாரம் எழுத்தாளர் திரு.அன்பாதவன் அவர்கள் துபாயில் என்னிடம் கொடுத்த சிற்றிதழ்களிலிருந்து, குறி என்ற சிற்றிதழ் குறித்தும், இலங்கையிலிருந்து வெளிவந்துள்ள " காற்புள்ளி " என்ற சிற்றிதழின் பி.டி.எஃப். பிரதி சுந்தர் நிதர்சன் மூலம் பெற்று பதிவு செய்துள்ளேன். வெறும் வாயை மெல்லும் முயற்சியில் நான் ஈடுபடுவதில்லை. நன்றி.


நானும் சிற்றிதழ் விரும்பிதான். அதற்காக சிற்றிதழை பகடி செய்யக்கூடாதா என்ன? எல்லா சிற்றிதழ்களும் உன்னதமாகவா வருகின்றன? சிற்றிதழ் என்ற சொல்லுக்காகவே ஏதும் புனிதத்தன்மை வந்து விடுகிறதா என்ன?
என் பதில் 
பகடி என்ற பெயரில் பொதுமைப்படுத்தி அவமானப்படுத்துவதை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா. இதே போகன் சங்கர் போன்ற எழுத்தாளார்களைப் பற்றி அற்பமான முறையில் பகடிகள் எழுத முடியும். அதுவல்ல என் நோக்கம். ஒரு சிற்றிதழை வெளிக் கொண்டு வர அவர்கள் கடந்து செல்லும் துயரம் , வேதனை, வலி, அவ்ர்களின் அர்ப்பணிப்பு இதையெல்லாம் உணர்ந்தவர்களால் இது போன்ற ஏளனங்களான எழுத்துக் குப்பைகளை பொது வெளியில் கொட்ட முடியாது. அது எந்த துறையச் சார்ந்தவராக இருந்தாலும் அவர்களின் உழைப்பின் பின்னனியில் உள்ள உண்மைகளை உணர்ந்து எழுத வேண்டும் என்பதுதான் என் அடிப்படைக் கருத்து. என் கருத்துக்கு பதிலிட்ட போகன் சங்கரின் கருத்தை படித்து பாருங்கள். அவரின் ஆணவம் தெரியும். நான் சிற்றிதழ் விற்பதற்காக அந்த கருத்தை கூறியதாக கொச்சைப்படுத்துகின்றார். இவர் எழுதும் புத்தகங்களையெல்லாம் வீட்டு டிரங்கு பெட்டியிலேயே பூட்டி வைத்துள்ளார். தேவைபடுபவர்கள் போய் இலவசமாக வாங்கிக் கொள்ளலாம். 
நண்பர்களே உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். நன்றி. வணக்கம். - கிருஷ்.ராமதாஸ் , 26.09.2016.


2 comments:

  1. .
    சிற்றிதழ்களை பகடி செய்வதோ, சிற்றிதழ்களை விமர்சனம் செய்வதோ தவிர்க்க முடியாத ஒன்று. ஏனென்றால் அது சிற்றிதழ்களில் மட்டுமே நடக்கக் கூடிய ஒன்று. சிற்றிதழ்கள்தான் தன்னை சுய மதிப்பீடு செய்ய முடியும். சுய பரிசோதனை செய்வதும் சிற்றிதழ்கள்தான். சிற்றிதழ்கள்தான் வாசிப்பாளனுக்கு முழு சுதந்திரம் தருகிறது. எழுதுகிறவனுக்கும் கூட. நான் 1997 முதல் சிற்றிதழ்கள் சங்கத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்து வருகிறேன். சங்கத்தின் தலைமை இதழான எமது "மகாகவி" இதழில் "சிற்றிதழும், சின்னக் குமுதங்களும்" எனும் தலைப்பில் தொடரே வந்தது. சிற்றிதழ்களை விமர்சனம் செய்கிறவர்கள் ஒருபோதும் பெரிதழ் பற்றி வாய் திறக்க மாட்டார்கள். அது அவர்களுக்கு தேவை இல்லாமல் இருக்கலாம். ஆதலால் நாம் கோபப்படத் தேவை இல்லை. வரவேற்போம். சில சிற்றிதழ்கள் வணிக நோக்கில் இயங்குவது கூட அவர்களின் கோபத்திற்கு காரணமாக இருக்கலாம். அவை நீர்த்துப் போகும் என்று அவர்கள் அறிந்ததே! உங்களின் கோபம், மகிழ்ச்சி, ஈடுபாடு எனக்கு மகிழ்ச்சி தருகிறது. சிற்றிதழ்களுக்கு நான் தொடர்ந்து சந்தா செலுத்துகிறேன் என்பதே நல்ல முன்னுதாரணம். தொடருங்கள்.. வாழ்த்துக்கள் ஐயா..

    ReplyDelete