Translate

Tuesday, September 27, 2016

சிற்றிதழ் விமர்சனம்

சிற்றிதழ் விமர்சனம் - 3.

நிகரன் சிற்றிதழ்விருதுநகர் மாவட்டம், ஆலங்குளத்திலிருந்து  திரு.பாஸ்கரன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளி வரும் இரு மாத சிற்றிதழ் தான் நிகரன்.
ஜோக்கர் திரைப்படத்தின் இயக்குனர் திரு.ராஜு முருகன் முகப்புப் படத்தை கொண்டு வெளியாகி உள்ளது.

1. மகா கவி பாரதியின் நினைவு நாளை போற்றும் வகையில் மூன்று கவிதைகள் பிரசுரிக்கப் பட்டுள்ளது சிறப்பாகும்.

2. நெசவுக் குடும்பத்தில் பிறந்து, கரிசல் மண்ணின் கலை, இலக்கியம் , வாழ்வியல் அனைத்தையும் தன்னகத்தே கொண்டு, இசைக் கலைஞனாக வாழ்ந்து மறைந்த திரு.திருவுடையான் குறித்த நினைவுக் கட்டுரை சிறப்பு. திருவுடையானுடன் திரை இசை மேதைகள் கொண்ட ஈர்ப்பு குறித்த பதிவுகள் அருமை. உடல் மறைந்தாலும் இசை உயிரோடு கலந்து பட்டி  தொட்டிகளெல்லாம் வாழ்ந்து வருகிறது என்று முத்தாய்ப்பாக முடித்துள்ளது அருமை.

3. திரு.லட்சுமண பெருமாள் அவர்களின் கரிசல் நாட்டு கருவூலங்கள் என்ற சிறு கதைத் தொகுப்பிலிருந்து  " அதே மூத்தாளி  " என்ற சிறு கதை வெளியாகியுள்ளது.  இந்த சிறு கதை கரிசல் மண்ணின் கலாசாரத்தையும் , வாழ்க்கை முறையும், பேச்சு வழக்கையும் முழுமையாக வெளிப்படுத்து சிறப்பானது .

4. கணிதமும் விநோதமான புனைவு என்ற தலைப்பில் வேலாயுதம் பொன்னுசாமி அவர்கள் உலக புகழ் பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளை பற்றி எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரை இந்த இதழுக்கு மகுடமகா திகழ்கிறது. நகுலனை வாசிக்க நனவோடை உத்தியும், போர்ஹேயின் சிறுகதைகளை வாசிக்க கண  கணிதம், வடிவ கணிதம், விநோதங்கள் பற்றி புரிதலின் அவசியத்தை வெளிப் படுத்துகின்றார். திரு.பிரமீள் அவர்கள் [ E = mc2 ] என்ற சூத்திரத்தை தலைப்பாக கொண்டு எழுதிய கவிதை முயற்சியை முன்னிலைப்படுத்தி உள்ளார். தொடக்கத்திற்கும்  இறுதிக்கும்  இடைப்பட்டவைகளை  தீர்மானிப்பதை இட்டு கட்டுதல் என்று போர்ஹே கூறுவதையும், ஒட்டி புழுகுதல் என்ற புதுமைப்பித்தனின் கருத்தையும் ஒப்பிட்டிருப்பது அருமை. 

Monday, September 26, 2016

போகன் சங்கருக்கு கண்டனம்

போகன் சங்கருக்கு கண்டனம் 

போகன் சங்கர் என்ற எழுத்தாளர் பகடி எழுதுவதாக கூறிக் கொண்டு சிற்றிதழாளர்கள் குறித்து கடுமையானதும், கண்டனத்திற்குரியதுமான பதிவுகளை தன் முக நூலில் இட்டுள்ளார் . 

இந்த பதிவு கடும் கண்டனத்திற்குரியது. 
போகிற போக்கில் சிற்றிதாழாளர்கள் மீது 
புழுதி வாரி இறைப்பதாகவும், அவமானப்படுத்துவதாகவும் உள்ளது. ஒவ்வொரு சிற்றிதழின் பின்னாலும் கடும் உழைப்பும், லாப நோக்கமில்லாத அர்ப்பணிப்பும், தமிழ் மீது கொண்ட காதலும் பின்னி பிணைந்திருக்கிறது. நீங்கள் நினைப்பது போல அவர்கள் உங்களிடம் மடிப் பிச்சை ஏந்தி நிற்பவர்கள் அல்ல. சுழலும் மெத்தையிலிருந்து கொண்டு, சுக போக சங்கராக இருக்கும் உங்களுக்கு பகடி செய்வதற்கும், ஏளனமும், எகத்தாளமும் கலந்த இந்த பதிவை செய்த உங்கள் மன நிலையைக் கண்டு பரிதாபப்படுகின்றேன். இது போல கேவலமான பதிவை போட்டு தங்கள் இருப்பை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமும், உங்களைப் போன்றவர்களிடம் சான்றிதழ் பெற வேண்டிய தேவையும் சிற்றிதழாளகளுக்கு இல்லை. எப்போதும் இருக்கப் போவது இல்லை. 

Monday, September 19, 2016

சிற்றிதழ் விமர்சனம் - 2.
" குறி " காலாண்டிதழ்.
துபாயில் உட்கார்ந்து கொண்டு ஒரு சிற்றிதழை எப்படி விமர்சனம் செய்ய முடியும் என்ற இயல்பான கேள்வி உங்கள் மனதில் எழுவதை நான் உணர்கின்றேன்.
ஒரு சிற்றிதழை படிக்காமல் விமர்சனம் செய்ய முடியாது. ஆனால் நான் துபாயிலிருந்தாலும் நண்பர்கள் உதவியுடன் பி.டி.எஃப். மூலமாகவோ, அச்சு பிரதி மூலமாகவோ விமர்சிக்க முடிவு செய்தவுடன், இலங்கையிலிருந்து திரு.சுந்தர் நிதர்சன் " காற்புள்ளி " என்ற சிற்றிதழின் பி.டி.எஃப். அனுப்பி இதழைப் பற்றி விமர்சிக்க வேண்டினார். அப்போதுதான் சிற்றிதழ் விமர்சனம் என்ற புதிய பகுதியை துவங்கும் எண்ணம் வந்து காற்புள்ளி இதழ் குறித்து எழுதினேன். அதற்கு நண்பர்களிடத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. மகிழ்ச்சியளித்தது. அதன் தொடர்ச்சியாக இன்று குறி காலாண்டிதழ் குறித்து பார்ப்போம்.
இந்த இதழின் அச்சுப் பிரதியை என் இனிய நண்பர், சிற்றிதழாளர் திரு.அன்பாதவன் அவர்கள் எனக்காக பிரத்தியேகமாக இந்தியாவிலிருந்து எடுத்து வந்து கொடுத்தார். முதலில் அவருக்கு என் நன்றியை உரித்தாக்குகின்றேன்.
தமிழக தென் திசையிலிருந்து சிற்றிதழ் துறையில் குறி பார்த்து கோலோச்ச வந்திருக்கும் சிற்றிதழ் தான் குறி காலாண்டிதழ். கூரை வேய்ந்த வீட்டிலிருந்து இலக்கியத்தின் மேன்மையை கூர் தீட்ட வந்துள்ள இதழ் தான் இது. இதன் ஆசிரியர் குழு திரு.மணிகண்டன் அவர்களின் தலைமையில் ஆர்வமிக்க எழுத்தாளர்களைக் கொண்டு செயல் திட்டத்தை முன்னெடுக்கிறது. பதிவுக்கு உகந்த எழுத்துகளை தெரிவு செய்வதில் சமரசமில்லாமல் செயல்படுவது, இதழில் வெளியாகி உள்ள பதிவுகளிலிருந்து உணர முடிகிறது.
சிற்றிதழ் விமர்சனம் - 1. 
"காற்புள்ளி" சிற்றிதழ்.
வணக்கம் நண்பர்களே. 


இதோ ஒரு புதிய பகுதி. சிற்றிதழ்களை முகவரி அளவில் ஏற்கனவே பதிந்து வருகின்றேன். அதோடு இல்லாமல் ஒவ்வொரு சிற்றிதழையும் விமர்சிப்பதன் மூலம் அந்த இதழின் சிறப்புகளை வாசகர்களிடம், ஆர்வலர்களிடம் கொண்டு செல்ல முடியும் என எண்ணுகின்றேன்.

இதோ முதல் இதழாக இலங்கையிலிருந்து வெளிவந்துள்ள " காற்புள்ளி " என்ற இதழை பற்றி பதிவு செய்கின்றேன். தவறு இருந்தால் சுட்டிக் காட்டுங்கள் நண்பர்களே.
இலங்கையின் அட்டன் பகுதியிலிருந்து, திரு.மாரிமுத்து சிவகுமார், சண்முகம் சிவகுமார் ஆகியோரை ஆசிரியர்களாக கொண்டு வெளி வந்துள்ளது.
இந்த இதழ் " இன்னும் உயிர்ப்போடு " என்ற அறிவிப்போடு வெளிவந்துள்ளது. கவிதை, கவிதையைப் பற்றிய கட்டுரைகள், வெளி நாட்டு பிரபல கவிஞர்கள் பற்றிய கட்டுரை என மிகச் சிறப்பாக வந்துள்ளது.