Translate

Monday, September 19, 2016

சிற்றிதழ் விமர்சனம் - 1. 
"காற்புள்ளி" சிற்றிதழ்.
வணக்கம் நண்பர்களே. 


இதோ ஒரு புதிய பகுதி. சிற்றிதழ்களை முகவரி அளவில் ஏற்கனவே பதிந்து வருகின்றேன். அதோடு இல்லாமல் ஒவ்வொரு சிற்றிதழையும் விமர்சிப்பதன் மூலம் அந்த இதழின் சிறப்புகளை வாசகர்களிடம், ஆர்வலர்களிடம் கொண்டு செல்ல முடியும் என எண்ணுகின்றேன்.

இதோ முதல் இதழாக இலங்கையிலிருந்து வெளிவந்துள்ள " காற்புள்ளி " என்ற இதழை பற்றி பதிவு செய்கின்றேன். தவறு இருந்தால் சுட்டிக் காட்டுங்கள் நண்பர்களே.
இலங்கையின் அட்டன் பகுதியிலிருந்து, திரு.மாரிமுத்து சிவகுமார், சண்முகம் சிவகுமார் ஆகியோரை ஆசிரியர்களாக கொண்டு வெளி வந்துள்ளது.
இந்த இதழ் " இன்னும் உயிர்ப்போடு " என்ற அறிவிப்போடு வெளிவந்துள்ளது. கவிதை, கவிதையைப் பற்றிய கட்டுரைகள், வெளி நாட்டு பிரபல கவிஞர்கள் பற்றிய கட்டுரை என மிகச் சிறப்பாக வந்துள்ளது.
1. கலாச்சாரமும் கவிதையின் மொழியும் - சில கோட்பாடுகள் என்ற பிரம்மராஜன் கட்டுரை அருமை.
2. மாரிமுத்து சிவகுமாரின் " ஏமாளிகள்" அரசியல் அதிரடி கவிதை அருமை. அரசியல் வாதிகளை தோலுரிக்கிறது. அதிலிருந்து சில வரிகள் வாசகர்களுக்காக -
வாக்கு பயிர் சீவுவதற்கு
வாய்க்கு வந்த பேச்சுமிங்கு
பேய் பிடித்த வெறிகளாக
பித்தலாட்ட பொம்மைகளும்
இப்படி அத்தனை வரிகளும் அனல் கக்குகின்றன.
3. சுந்தர் நிதர்சனின் கவிதை : மரணத்தின் பின் வாழும் அப்பாவின் கண்ணீர். - உணர்ச்சி மிகுந்த கவிதை.
நத்தையாய் சில ஞாபகங்களைத் தவிர,
உங்களோடு நான் ஒட்டி உறவாடியதில்லை.
எனக்காய் நீங்கள் வடித்த கண்ணீரின் கனமும்
எனக்காய் சிதைந்து போன உங்கள்
உடலின் ரணமும் தெளிவாய் தெரிகிறது.
இந்த வரிகளை படித்த போது என் அப்பாவின் நினைவுகள் வந்து உணர்ச்சி பிழம்பானேன் என்றால் மிகையாகாது.
சுந்தர் நிதர்சன் உங்கள் எழுதுகோலை என் கண்ணீரால் நனைத்துக் கொண்டிருக்கின்றேன்.
4.கவிதைக் கேட்ட நரி - எஸ்.ராமகிருஷ்ணன் கட்டுரை சிறப்பு.
5. பபியான் கவிதைகள் அருமை.
6.மேற்கு போலந்தின் புகழ் பெற்ற கவிஞர் திரு.விஸ்லாவா சிம்போர்கா அவர்களின் நோபல் பரிசு பெற்ற போது அவர் ஆற்றிய உரையின் தமிழாக்கம் இந்த இதழுக்கான முத்தாய்ப்பு. அவசியம் படிக்க வேண்டிய உரை.
7. மாரிமுத்து சசிரேகா அவர்களின் "கால்கள்" கவிதை காற்புள்ளி இதழுக்கு மணி மகுடம் என்று கூறலாம்.
செருப்பின்றி நடப்பதால்
கற்கள் உள்ளேறி ரத்தம் கட்டிப் போய்
முறுக்கேறிப் போன வைரம் பாய்ந்து
எங்களுக்காய் வெந்து தணிந்த
என் அம்மாவின் காலகள்.
இதை விட உணர்வு பூர்மாக ஒரு கவிதை எழுத முடியுமா என எனக்குத் தெரியவில்லை.
சகோதரி சசிரேகா தலை வணங்கி வாழ்த்துகின்றேன்.
இறுதியாக கண்ணகியின் இறுதி மடல் இந்த இதழின் உச்சம்.
அதிரும் பூமியில்
நடு நடுங்கும் ஓலங்கள் மத்தியில்
உனக்காக காத்திருந்தேன்.
இன்னும்.... இன்னும்.. நிறைய, நிறைவாய் மனதில் நிற்கும் சிற்றிதழ் தான் " காற்புள்ளி ". கட்டாயம் படிக்க வேண்டிய சிற்றிதழ்.
வெளியீட்டுக் குழுவிற்கு சிற்றிதழ்கள் உலகம் தளத்தின் இதய பூர்வமான வாழ்த்துக்கள். குறிப்பாக இந்த இதழின் பி.டி.எஃப். பிரதியை அனுப்பிக் கொடுத்த என் முகநூல் நண்பன் சுந்தர் நிதர்சனுக்கு என் நன்றியைக் காணிக்கையாக்குகின்றேன்.
கிருஷ்.ராமதாஸ், சிற்றிதழ் நலம் விரும்பி.
19.07.2016

No comments:

Post a Comment