Translate

Wednesday, December 21, 2016

சிற்றிதழ் வாசகர் விமர்சனம்

சிற்றிதழ் வாசகர் விமர்சனம் 
பெயல் ஆய்விதழ் 
ஆசிரியர்: டாக்டர்.செந்தில்குமார் 
கோவை.

வணக்கம் நண்பர்களே.
இதழியல் துறையில் ஒரு புதிய சகாப்தமாக வெளி வருகிறது பெயல் ஆய்விதழ். ஆய்வுக்காக மட்டுமே பிரத்தியேகமாக வரும் இதழ். டாகடர்.செந்தில்குமார் அவர்களை ஆசிரியராகக் கொண்டு, பல வல்லுநர்களை குழு உறுப்பினர்களாக கொண்டு கோயம்புத்தூரிலிருந்து பீடு நடை போடும் இதழ் தான் பெயல். முதலில் இந்த பெயரைக் கேட்டதும் எனக்கு புதுமையாக இருந்தது. ஆசிரியரை தொடர்பு கொண்டு இதழைப் பற்றி கேட்ட உடன் பி.டி.எப். அனுப்புகின்றேன் படித்து கருத்து சொல்லுங்கள் என்றார். அதைக் கண்ட போது  தான், அது என் அறிவுக்கு மீறியதாக இருந்தது. நம்மிடம் ஒரு எதிர்பார்ப்போடு அனுப்பி உள்ளார், என்ன செய்வது என்று குழம்பிய எனக்கு ஒரு யோசனை வந்தது. வாசகர்களிடம் இருந்து பெறுவோம் என்று வாசகர் விமர்சனம் பகுதியில் அறிவித்து இதழ்  அனுப்பப்பட்டது. அதற்கு எழுத்தாளர், முகநூல் நண்பர் திரு.முகம்மது பாட்சா அவர்கள் அனுப்பிய விமர்சனத்தை அப்படியே இங்கே பதிவிடுகின்றேன். இதில் உள்ளவை எழுத்தாளரின் முழு கருத்து. நான் எந்த திருத்தமும் செய்யாமல் அப்படியே பதிவிட்டுள்ளேன்.


மு.முகமது பாட்சா
எழுத்தாளர்.


"பெயல்" ஆராய்ச்சி மாணவர்களுக்கான, அவசிய நூலென்றே சொல்லலாம். 
தலையங்கமே சாட்டையை சுழற்றியடிக்கிறது!  ஆராயும் மனப் பான்மையில்லாமல், ஆராய்ச்சி கட்டுரைகளென்பது  கேலிக் கூத்தான ஒன்று. ஓர் ஆராய்ச்சி கட்டுரையென்பது , மாணவனின் தெளிந்த மழைச் சாரலாக வியாபிக்க வேண்டும் . துணை நிற்கும் ஆசிரியர்களும், சிறந்த வழிக் காட்டிகளாக இருக்க வேண்டும் என்பதை தெளிவாக சொல்கிறது.
"விமர்சனங்களை செவிமடுக்காத இடத்தில், நல்ல விதைகள் முளைப்பதில்லை" என்ற பதம், அனைத்து துறைகளுக்குமே பொதுவானது. 


முனைப்பு இல்லாத, வாசிப்பு திறனற்ற ஆசிரியர்களை சாடுவதும் கூட , திறன்மிக்க நல்ல பண்பாளர்களை உள்ளடக்கிய சமூகமாக, இந்த ஆசிரிய சமூகம் வரவேண்டும் என்ற நோக்கம்தான். இவ்வளவு நீண்ட ஒரு தலையங்கத்தை, இந்த இதழில்தான் பார்க்கிறேன். இதுவும் சமூக அக்கரைதான் !

அடுத்ததாக, "உடல் வரையும் சடங்குகளும், சடங்கு வரையும் உடல்களும்"  ச.பிலவேந்திரன் அவர்களின் உயிர்த் துடிப்பான ஆராய்ச்சி கட்டுரை ! - தலைப்பே, நம்மை உள்ளே நுழைக்கிறது.
உடல் கூறுகளை, பிம்பங்களாகவும், மருத்துவக் கூறுகளாகவும் பார்க்காமல், சமூகத்துடன் இயைந்து பார்க்கச் சொல்லும் பதிவு. 

உடலியலான வளர் மாற்றங்களை சமூகம் எவ்வாறு கைக் கொள்கிறது என்பதும் விரிவாக விளக்கப் பட்டுள்ளது. பெண்ணின் வளர் மாற்றங்களையும், சமூகப் பார்வைகளும், அட்டவனை படுத்தியுள்ளது சிறப்பு ! குழந்தையிலிருந்து, இறப்பு வரை உள்ள உடல்மீதான சடங்குகளை ஆழமாக விவரித்துள்ளது.

'திவாகர நிகண்டினை பற்றிய ஆய்வு,  ச.பால்ராஜ் அவர்களின் கட்டுரையும் , சிலத் தெளிவுகளை, நமக்கு முன் வைக்கிறது. 

 "தலித் அறம்" பற்றிய அரங்கமல்லிகா வின் கட்டுரையை, தனது திறனாய்வால் செம்மை செய்கிறார், ஜோ.செ.கார்த்திகேயன். 

தலித் இலக்கியங்களின் மீதான பார்வையை, இரண்டு விதமாக வைக்கிறார்! 1.தலித் இலக்கியங்களை,தலித்துகளே ஆய்வது, 2. தலித் அல்லாதோர் ஆய்வதென்று. இதன் அடிப்படையில் அரங்கமல்லிகாவின் ஆய்வை, இரண்டாம் பார்வைக்கு தள்ளுகிறார், அதில் அவர் குறிப்பாக வைக்கும் குற்றச் சட்டு, அவர்களின் சாதிய ஆதிக்க மன நிலை  வெளிப்படுகிறது' என்பதாகும்.

மேலும் அவரின் தலித் அறம் பற்றிய சில பார்வைகளையும், கேள்விகளுக்கு உள்ளாக்குகிறார்.

'முற்றுவினைப் பகுதிகள்'- ஒரு மறு பார்வை.  இரா. கோதண்டராமன் தமிழ் மொழிக்கான சிறந்த ஆய்வாக எடுத்துக் கொள்ளலாம். பொது வினைமுற்றிலிருந்து, சார்பிலா முற்றுவினை, சார்புடைய முற்றுவினைப்பகுதியென , அட்டவனைகளுடன் விரிகிறது !

தொல்காப்பியத்தை, இலக்கண நூல் என்ற வரையறைக்குள் நிறுத்தாமல், பெண்ணிய நோக்கில் , பெண் மரபுகளையும், தமிழ் பண்பாட்டினையும்,ஆய்வு செய்வதாக அமைந்துள்ளது, சு.இளங்கோ அவர்களின்,"தொல்காப்பியப் பெண்மரபுகள்-ஒரு பெண்ணியப் பார்வை" என்கின்ற ஆய்வுக் கட்டுரை !

பெண்ணின் இயங்குவெளி,அனுபவ நிலை, நுண்பொருண்மை என்று பிரித்துக் கொண்டு, ஆய்வை நகர்த்துகிறார். தலைவி கூற்று, காமம், ஆண்களின் அற முகமூடிகள் பற்றியும் விரிவாக சொல்கிறது.

பண்பாட்டுச் சூழலியலை  ,எட்டுத்தொகையுடன் பொருத்தி ஆ.புஷ்பா சாந்தி கட்டுரையும், காண முடிகிறது . இறைச்சி,பால், தயிர், நெய் எனப் கால் நடை ஊணவுப் பொருட்கள், பண்டமாற்றில் முக்கிய இடம் வகித்ததையும், கால் நடைகளை, தன்வயப்படுத்தியதால், உணவு உற்பத்திகளை பெருக்க முடிந்ததையும் கூட சித்தரிக்கிறார்.

களந்தை பீர்முகம்மது, அவர்களின் பின்னூட்டமும், இந்த இதழுக்கு சிறப்பு சேர்க்கின்றன !
குறிப்பாக இந்த பெயல் இதழில் வெளியாகியுள்ள ஆய்வு கட்டுரைகளில், வேறு நூல்களின் திருட்டு கண்டுபிடித்தால் 1000 ரூபாய் பரிசு என்ற வாசகர்களுக்கான அறிவிப்பும், நமக்கு திகைப்பை ஏற்படுத்துகிறது !

பெயல், நல்ல சாரல் மழை. நிச்சயம் நனையலாம் !

பார்வை: மு.முகமது பாட்சா*
எழுத்தாளர்.

பெயல் இதழின் ஆசிரியர் குழுவுக்கும், இதழின் வல்லுநர் குழுவில் இணைந்துள்ள கோவை ஞானி, சிற்பி, நாச்சிமுத்து, பஞ்சாங்கம் ஆகியோருக்கும் சிற்றிதழ்கள் உலகம் சார்பாக வாழ்த்துதலை தெரிவித்துக் கொள்கின்றேன். 

கிருஷ்.ராமதாஸ், 
சிற்றிதழ்கள் உலகம்.
21.12.2016.


1 comment: