Translate

Friday, March 31, 2017

மாயயை உடைக்க வேண்டும் என்ற வெறி.

மாயயை உடைக்க வேண்டும் என்ற வெறி.
தமிழ்ச் சிற்றிதழ்கள் நிலை

வணக்கம் நண்பர்களே.
தமிழ்ச் சிற்றிதழ்கள் என்றால் குறைப் பிரசவம். ஆயுள் குறைவு. நீண்ட நாட்கள் வந்தால் அது சிற்றிதழ் இல்லை.
இது போன்ற பேச்சுக்களை இன்னும் எத்தனை நாட்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கிப் போகின்றோம். இந்த நிலையை மாற்ற நாம் என்ன திட்டத்தை முன் வைத்திருக்கின்றோம். இது கடந்த 6 ஆண்டுகளாக இணைய உதவி மூலம், என் கவனம் முழுவதையும் சிற்றிதழ் துறையில் செலுத்த ஆரம்பித்த உடன் எனக்குள் எழுந்த கேள்வி தான் இது. அதனால் நம் பயணம் இந்த இலக்கை நோக்கித்தான் இருக்க வேண்டும் எனத் தீர்மானித்தேன்.


அதன் ஒரு அங்கமாகத்தான் சிற்றிதழ்கள்  ஊக்குவிப்புத் திட்டம் என்ற திட்டத்தை துவக்கி தமிழ் நாடு முழுவதிலிருந்து 10 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து வெளி வரும் சிற்றிதழ்களுக்கு 3 ஆண்டு சந்தா அளிக்கும் முடிவை எடுத்து கடந்த 2015 & 2016 ஆண்டுகளில் சுமார் 40 இதழ்களுக்கு சந்தா அனுப்பபட்டது.
அதன் பிறகு இது ஓர் தீர்வாகாது. தனி மனிதன் செய்யும் உதவி பெரிய அளவில் விரிவடையும் வாய்ப்பு குறைவு. அதனால் இதன் அடிப்படைக் காரணத்தை, ஆராய்ந்து, அறிந்து, அதை சரி செய்யும் முயற்சியில் இறங்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். நிறைய சிற்றிதழ்கள்  குறித்த பதிவுகளை தேடி படிக்க ஆரம்பித்தேன். பழைய சிற்றிதழாளர்களுடன் கருத்தறிந்தேன். எல்லா நிலையிலும் தனிப்பட்ட ஒருவரின் ஆர்வத்தால் நடத்தப்படும் அல்லது குழுக்களால் நடத்தப்படும் சிற்றிதழ்களில் 90% இதழ்கள் பொருளாதார  தற்சார்பின்மையால் தான் கைவிடப்பட்டுள்ளன என்ற உண்மையைக் கண்டறிந்தேன். ஆகவே நம் இலக்கு இது தான். இதை தனி நபரோ, அமைப்போ தீர்த்து வைக்க இயலாது என்ற நிலையில் வேறு திட்டங்களை நோக்கி செல்ல வேண்டிய நிர்பந்தம்.

நட்டத்திற்கான முக்கிய காரணங்கள்:

1. தொடர் சந்தா இல்லாமை.
2. விற்பனை இல்லாமை அல்லது முகவர்களின் ஒத்துழைப்பு                 இல்லாமை.
3. அளவுக்கதிகமான பிரதிகள் அச்சடிப்பது.
4. தொடர் வெர்ளியீட்டிற்கான மூலதன திட்டமிடல் இல்லாமை.
5. மாற்று இதழ் மற்றும் அன்பளிப்பு  இதழ் என்ற பெயரில்                         அளவுக்கதிகமான          இதழ்களை இலவசமாக அளிப்பது.
6. நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தாமை.

இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். அது தேவை இல்லை. தீர்வை நோக்கிய நகர்வை தொடங்கத் தீர்மானித்தேன்.
இந்த காலகட்டத்தில் தான், சிற்றிதழ் மீதான அவப் பெயரை போக்க வேண்டும். சிற்றிதழ் என்றால் தொடர்ந்து வெளி வராது என்ற மாயை உடைக்க வேண்டும் என்ற ஒரு வெறி என்னுள் எரியத் தொடங்கியது. அதை தணிக்கும் விதமான செயல் திட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்தேன்.

தீர்வு என்ன?

1. இதழின் லேஅவுட் அத்தனையும் கணினி உதவியுடன் செய்வது.
2. இதழை இணையத்தில் வெளியிடுவது.
3. உலக வாசகர்கள் படிக்கும் வகையில் பிரபலமான டிஜிடல்                 நியூஸ் ஸ்டேண்டுகளில், இதழ்களை வைக்க செய்வது.
4. முன் பணம் கட்டுபவர்களுக்கு மட்டும் பிரிண்ட் ஆன் டிமாண்ட்     திட்டத்தின் கீழ் அச்சடித்து கொடுப்பது.
5. மாற்று இதழ்கள் அல்லது இலவச இதழ்கள் கொடுப்பதில்லை         என்பதை     கொள்கை முடிவாக தீர்மானிப்பது.
6. மூலதன அல்லது விதை நிதி திரட்டி வெளியீட்டை                                        உத்திரவாதப்படுத்துவது.
7. நம் இணையத்தில் அனைவரும் இலவசமாக படிக்கும்                           வாய்ப்பை வழங்குவது.
8. பங்கெடுக்கும் எழுத்தாளர்களுக்கு இமெயில் மூலம் பிடிஎப்               பிரதிகள் அனுப்பிக் கொடுப்பது.
9. எழுத்தாளர்களுக்கு அச்சுப் பிரதி வழங்குவதற்கான                                 ஸ்பான்சர்களை கண்டறிவது.

இப்படி திட்டத்தை எழுத்தளவில் மட்டும் சொல்லிவிட்டு போவாமானால், நம்பகத்  தன்மை இல்லாமல் போய்விடும் என்பதால், நாமே முன்னின்று செய்து காட்டுவது என்று தீர்மானித்தேன்.

அதன் முதல் படியாக "சிற்றிதழ்கள் உலகம்" இதழை முதலில் மின்னிதழாக வெளியிட தீர்மானித்தேன். அப்படியே இணையத்திலும் வெள்ளியிட்டோம். அது மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் சுமார் 500 வாசகர்களுக்கு பிடிஎப் பிரதியாக இமெயில் மூலம் அனுப்பிக் கொடுத்துள்ளோம். பெரும் வரவேற்பை பெற்றுத்  தந்துள்ளது.
அடுத்து முதல் இதழை உலகம் முழுவதும் நண்பர்களின் உதவியுடன் வெளியடத் தீர்மானித்து, குவைத், துபாய், சென்னை, மயிலாடுதுறை, பெங்களூர் ஆகிய இடங்களில் மிகச் சிறப்பாக வெளியிட்டோம்.
அந்த நிகழ்வுகளுக்காக முன்னெடுப்பு செய்த நண்பர்கள் கார்த்திகேயன்  சரவணன்,   முருக தீட்சண்யா, வெற்றிப் பேரொளி அய்யா, தஞ்சை வரதராசன், வதிலை பிரபா, புலவர் பூ.அ.ரவீந்திரன் போன்ற நல்லுள்ளங்களுக்கு என் நன்றியையும் வாழ்த்துக்களையும் உரித்தாக்குகின்றேன்.












முதல் இதழை அச்சுப் பிரதி மூலம் தமிழகம் முழுவதும் சிற்றிதழாளர்கள், எழுத்தாளர்களிடம் கொண்டு செல்ல தீர்மானித்து ஸ்பான்சர் வேண்டுமென அறிவிப்பு வெளியிட்டேன். எதிபாராத அதிர்ச்சி. வெளியிட்ட சரியாக 10 நிமிடத்தில் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கத் தலைவர் அய்யா திரு.புலவர் இரவீந்திரன் [கோவை] அவர்கள் 100 பிரதிக்கான அச்சுத் தொகை ரூ.1,500/= தான் ஏற்பதாக பதிவிட்டிருந்தார். ஒரு பக்கம் அடக்க முடியாத உணர்வு  மேலிடச்  செய்து மகிழ்ச்சி  வானில் கொடி கட்டி என்னை பறக்கச் செய்தது என்பது உண்மையாகும். ஆம். அத்தனை மகிழ்ச்சி . அவருடைய ஒப்புதலின் படி பிரிண்ட் ஆன் டிமாண்ட் திட்டத்தில் 100 பிரதிகள் அடிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் அனுப்பப்பட்டு, மாபெரும் வரவேற்பைப்  பெற்றுள்ளது. இந்த நேரத்தில் இந்த பேருதவியை செய்த அய்யா புலவர் பூ.அ. இரவீந்திரன்  அவர்களுக்கு சிற்றிதழ்கள் உலகம் இரு கரம் கூப்பி நன்றியை காணிக்கையாக்குகிறது. நன்றி அய்யா.

தற்போது சிற்றிதழ்கள்  உலகம் 2வது  இதழ் இணையத்தில் வெளியிடப்பட்டதுடன், உலகம் முழுவதும் வாசகர்களுக்கு இமெயில் மூலமும் அனுப்பபட்டு  வருகிறது. மாற்று இதழ் அல்லது இலவச இதழ் கிடையாது என்பதை சிற்றிதழ்கள் உலகம் கொள்கை  முடிவாக எடுத்துள்ளது. தற்போது சந்தா சேர்க்கும் பணி  மேற் கொள்ளப்பட்டு வருகிறது. அவர்களுக்கு மட்டும் அசசு  பிரதிகள் அடிக்கப்பட்டு, அஞ்சலுக்கு தயாராகிவிட்டது.
எங்களுடைய நோக்கம்  எந்த ஒரு சிற்றிதழாளரும் பொருளாதார நட்டம் என்ற பெயரில் இதழை நிறுத்தக் கூடாது. 
ஒரு சிற்றிதழாளரின் ஆர்வம், உழைப்பு, அர்ப்பணிப்பு அனைத்தும் இலக்கிய வாசகர்களுக்கு இலவசமாக தரத் தகுந்தவை. ஆனால் அவர் செலவிடும் தொகை கட்டாயம் தரப்பட வேண்டும். இலவசம் என்ற பேசசுக்கே இடம் கிடையாது. இதை ஒவ்வொரு சிற்றிதழாளரும் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும்.

முதல் கட்டமாக 52 பிரதிகள் அச்சடிக்கப்பட்டு, இன்று முதல் அஞ்சல் செய்யப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பங்கெடுக்கும் எழுத்தாளர்களுக்கு இதழ் கொடுக்க விரும்புபவர்கள் அதற்க்கான ஸ்பான்சர்களை கண்டடைய  வேண்டும்.

நண்பர்களே. இப்போது உங்களுக்கு தெளிவு பிறந்திருக்கும், ஒரு சிற்றிதழை நட்டம் இல்லாமல்  நடத்த முடியும்  என்று. இப்போது மீண்டும் அழைக்கின்றேன், நண்பர்களே வாருங்கள் சிற்றிதழ் துவங்கலாம். 

கொழுந்து  விட்டு எறிந்த தீயை அணைக்கும் ஒரு சிறு தொடக்கமாக நான் துவங்கியுள்ளேன். நீங்களும் வழி கூறலாம் நண்பர்களே.

வாழ்த்துக்கள்.

கிருஷ்.ராமதாஸ்,
31.03.2017. 

2 comments:

  1. அச்சுப் பிரதியாய் சந்தாதாரர்களுக்கு அனுப்பும் முயற்சியால் சிற்றிதழ் வாழும் ஐயா....
    தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
    இதை என் நட்பு வட்டத்திலும் கொண்டு செல்கிறேன் ஐயா....

    ReplyDelete
  2. தங்களின் விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி கண்டு மகிழ்ச்சி. பாராட்டுகள்.

    ReplyDelete