Translate

Thursday, January 26, 2017

ஈழ இலக்கிய சிற்றிதழின் உலக சாதனை

ஈழ இலக்கிய சிற்றிதழின் உலக சாதனை 
ஞானம் சிற்றிதழின் 200வது இதழ் வெளியீடு.
ஆசிரியர் : திரு.தி.ஞானசேகரன், 
இலங்கை.

இலங்கையிலிருந்து இலக்கிய பெருந்தகை அய்யா திரு.ஞானசேகரன் அவர்களால் நடத்தப்படும் சிற்றிதழ் தான் ஞானம். ஈழ  இலக்கிய உலகின்  விடிவெள்ளியாக இந்த இதழ் திகழ்ந்து வருகிறது என்றால் மிகையாகாது. ஒரு இதழை தொடர்ந்து 200 இதழ்கள் வெளிக் கொண்டு  வருவது என்பது ஒரு உலக சாதனையாகும். 


சிற்றிதழ் என்றால் குறை பிரசவம், வந்த வேகத்திலேயே போய்விடும் போன்ற அவச் சொல்களை புறந்தள்ளி மாபெரும் வெற்றியடைந்திருக்கின்றது ஞானம் சிற்றிதழ். 200 இதழ்களை தொடர்ந்து வெளியிட்டு சாதனை புரிந்த அய்யா திரு.தி.ஞானசேகரன் அவர்களுக்கு சிற்றிதழ்கள் உலகம் வாழ்த்துதலை உரித்தாக்குகிறது. வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச்   சேரும். அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம் ஞானம் சிற்றிதழையே சேரும். 
கடந்த 22.01.2017 அன்று கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடந்துள்ளது. அந்த நிகழ்வு செய்தியை குறித்து திரு.தேவராசா கஜீபன் அவர்களின் பதிவை அப்படியே இங்கு பதிவு செய்கின்றேன். 


ஞானம் சிற்றிதழ் 200ஆவது வெளியீட்டு விழா
கடந்த 22.2.2017 (ஞாயிறு) மாலை 5.00 மணியளவில் கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் பேராசிரியர் நா. சுப்பிரமணியன் (கனடா) தலைமையில் ஞானம் 200வது இதழும், தி.ஞானசேகரனின் பவளவிழாமலரும் வெளியிடப்பட்டது.
வாழ்த்துரையினை 'கலாகீர்த்தி' பேராசிரியர் சி.தில்லைநாதன் வழங்க ஆசியுரையினை கௌரவ தெ.ஈஸ்வரனும் நயவுரையினை 'சாகித்யரத்ன' பேராசிரியர் சபா.ஜெயராசாவும் பாராட்டுரையினை பேராசிரியர் சோ.சந்திரசேகரமும் வழங்க புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர் முன்னிலையில் நூல் வெளியீடு செய்து வைக்கப்பட்டது. இசை விருந்தினை மிருதங்கவித்துவான் யாழ். வட்டுக்கோட்டை - பம்பலப்பிட்டிய பிரம்மஸ்ரீ க.சுவாமிநாதன் சர்மாவின் 'இசை அர்ச்சனை' குழுவினர் வழங்கியிருந்தனர்.

நிகழ்வு மங்கலவிளக்கேற்றலுடன் ஆரம்பிக்க தமிழ்த்தாய் வாழ்த்தினை செல்வி சௌதாமினி மோகனசுந்தரம் வழங்கியிருந்தார். தொடர்ந்து வரவேற்புரை, ஆசியுரை, தலைமையுரை என்பன இடம்பெற நூல்வெளியீட்டுரையினை ஞானம் பாலச்சந்திரன் வழங்கினார். அதனையடுத்து "ஈழத்துத் தமிழ் நவீன இலக்கியவெளி-நேர்காணல்கள்" என்ற ஞானம் 200வது இதழும். "ஞானரதம்" என்ற தி.ஞானசேகரனின் பவளவிழாமலரும் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.



வாழ்த்துரையைத் தொடர்ந்து பவளவிழாமலர் தொகுப்பாசிரியர் செல்லத்துரை சுதர்சன் (பேராதனைப் பல்கலைக்கழகம்) அவர்களால் தொகுப்பாசிரியர் உரை வழங்கப்பட்டது. தொடர்ந்து நயவுரை,பாராட்டுரை என நிகழ்வு தொடர 'செம்பியன் செல்வன்' சிறுகதைப்போட்டி 2016 பரிசளிப்பு வைபவம் இடம்பெற்றது.
தொடர்ந்து நன்றியுரை இடம்பெற இசைவிருந்து, இராப்போசன விருந்து என்பவற்றோடு நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது. விழா ஒழுங்கமைப்பினை கலாபூஷணம் க. பொன்னுத்துரை அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.
"பகிர்தலின் மூலம் விரிவும் ஆழமும் பெறுவது ஞானம்"
தேவராசா கஜீபன்.

ஞானம் சிற்றிதழ் திரு.ஞானசேகரன் அய்யா அவர்களுக்கும், குழுவினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். மற்ற இதழாளர்கள் ஞானம் இதழை முன்னோடியாக பாவித்து தொடர் வெளியீட்டிற்கான முன்னெடுப்பை மேற் கொள்ள வேண்டுகின்றேன். நன்றி. வாழ்த்துக்கள். 
கிருஷ்.ராமதாஸ், 
சிற்றிதழ்கள் உலகம்,
27.01.2017.

No comments:

Post a Comment