Translate

Wednesday, June 7, 2017

டிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்

டிரங்குப் பெட்டியிலிருந்து
அஸ்வமேதா சிற்றிதழ்
அறிமுகம் செய்பவர் : திரு.அ.நாகராசன்.

வணக்கம் நண்பர்களே.

இந்த டிரங்குப் பெட்டியிலிருந்து என்ற பகுதி. தமிழ்ச் சிற்றிதழ் உலகில் ஒரு காலத்தில் பீடு நடை போட்டு, நின்று போன சிற்றிதழ்களை உலக வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் பகுதி. இதில் இன்றைய வாசகர்கள் அறிந்திராத பழைய சிற்றிதழ்களை வெளிக் கொண்டு வந்து,  அதன் முகப்புப் படத்துடன், இதழின் சிறப்புகளை எடுதுரைப்பதின்மூலம், சிற்றிதழ்கள் மீது  ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் உருவாக்கும் நோக்கம் தான் இதன் மைய பொருள் ஆகும்.






அந்த வகையில் சிற்றிதழ்களின் பேராதரவாளர் அய்யா திரு.அ.நாகராசன், ஹைதராபாத்திலிருந்து, 1988ல் பாளையங்க்கோட்டையிலிருந்து  பட்டையைக் கிளப்பிய "அஸ்வமேதா" என்ற சிற்றிதழை உங்கள் பார்வைக்கு கொண்டு வந்துள்ளார். அய்யாவின் பதிவை அப்படியே இங்கு தருகின்றேன்.


அஸ்வ மேதா

ரமேஷ் ராம்,ஜோசப் லூயிஸ், தரும ராஜ்,வின்சென்ட் பால்,ஸ்ரீனியம்மாள். இவர்களை ஆசிரியர் குழுவாகக்கொண்டு அஸ்வமேதா என்ற சிற்றிதழ் பாளையங்கோட்டையில் இருந்து வெளி வந்து கொண்டிருந்தது.

அக்டோபர்,நவம்பர் 1988 இதழில் பிரமிள் அவர்களின் தெற்கு வாசல் என்ற கவிதையும், கிரணம் என்ற காலாண்டு கவிதை இதழ் பற்றி பிச்சுமணி கைவல்யத்தின் பார்வையும் வெளியாகி உள்ளது.
சமுதாய, அணுபவ, உளவியல் சார் யதார்த்தவாத படைப்புகளை,நிர்தாட்சண்யமாய் விமர்சிக்கும் இந்த இதழ் பின்-நவீனத்துவம், அமைப்பியல்,abstractism, surrealism போன்ற சிந்தனைகளில் எழுந்த சிறுகதை கவிதைகள் மற்றும் கட்டுரைகளை மிகவும் சிலாகித்து பேசுகிறது.


ரியலிசம்,மார்டனிசம் மார்க்ஸிசம், என்ற பெயரில் குறுகலான   ,சிந்தனைக்குள் படைப்புகளை சிறையிலிட்டதோடல்லாமல்  தனது  கண் கொண்டு பிரபஞ்சத்தை காண வாசகனை நிர்பந்திக்கும் பிரபல தமிழ்கவிஞர்கள், படைப்பாளிகள், சிந்தனாவாதிகள் என்று பலரையும் இந்த பத்திரிகை விமர்சித்துள்ளது.

பிரமிள் அவர்களின் தெற்கு வாசல் நீள் கவிதை வாசிக்க இதமாக இருக்கிறது.பிரமிள் படைப்புகள் காலம் திரிந்த அகவெளி பயண அனுபவங்கள்.
நேற்றின்று , நாளை  என்ற
மூவிலை சூலத்தில்,
கிழிபட்டு குலைந்து, அழிந்து கொண்டிருக்கின்றன...”என்ற வரிகளில்  மூவிலை சூலம் அற்புதமான கற்பனை.

காலிடறும் கல்லும்,
ஒருநாளில்லை ஒருநாள்
காலனுரு கொள்ளும்..”

இவரின் கவிதைக்குள் உறையும் இசை தன்மை இயல்பானது.செயற்கை சுவாச சத்தத்தில் வாழ்வதல்ல.பிரமிள் கவிதைகள் காலம், மரணம்,    அக வெளி குறித்து ,ABSTRACT IMAGES மூலம் சொல்லும் விஷயங்கள் எல்லைகளை இழந்தவை. .இக்கவிதையில் கால பைரவரும்.தெற்கு கோபுர வாசலில் திகைத்து நிற்கும் கல்லும் இந்த வகையை சார்ந்தவை.

பிளாத்தின் ஒரு பறவையின் எச்சங்கள்  என்ற  கவிதையும் நன்கு உள்ளது. மத்திய வர்க்க தார்மிக கோபமும்,திசை அறிந்தும் பறக்க இயலா வயிற்று பசியும், எதிகால அச்சுறுத்தலும் இந்த கவிதையில் சிறப்பாக பதிவாகி உள்ளது.

 “ சக்தியற்ற பூச்சி ரூபத்துக்கு
துப்பாக்கி ஓசை எப்படி கிடைக்கும்.”

என்னை
மர உச்சியிலிருந்து
பிய்த்தெறிய
சட்டை பித்தான்களை
திரட்டி குவித்தனர்
வாசக சாலை நண்பர்கள்.

இக் கவிதையின்  ஒரு சில சிறந்த வரிகள்.
இந்த இதழில் இன்னும் ஒரு சிறப்பு

“ POETRY  ABSTRACT   THOUGHT –DANCING and WALKING. என்ற Paul Velery  (1871-1945)--யின்  கட்டுரையின் தமிழாக்கம் வந்துள்ளது.
படைப்புகள் நிஜ உலகம் கடந்த சூட்சம பயணம். தனக்குள் நிகழ்ந்த இந்த  அகவெளி அணுபவ உணர்வுகளை படைப்பாளி வாசகனுள்ளும் ஜனிக்க செய்தல் வேண்டும். அதே படைப்பாளியின் வெற்றி.
நடத்தலும் நடனமும் உரை நடைக்கும், கவிதைக்கும் உள்ள இடை வெளி. இந்த இடை வெளியில் புதிர் தன்மை மிக்க எல்லையில்லா சிருஷ்டி வகைகளும், உருவங்களும் தோன்றி மறையும்.அதை சிலவற்றை தான் கவிஞன் தேடி கண் டெடுத்து இணைக்கிறான்.சமயங்களில் அந்த இணைப்பில் இசை நயமும் இருக்கும் .
      இந்த இதழில் வெளி வந்த மர்ம நாவல் என்ற ஸில்வியாவின் சிறுகதையின் வடிவம் ஆச்சர்யத்தை தருகிறது.        

உன்மையிலேயே பிரமிப்பூட்டுகிறது இந்த இதழின் உள்ளடக்கங்கள்.

 ஆசிரியர் குழுவின் இலக்கிய அர்ப்பணிப்பு ஈடு இணையில்லாதது. பங்கெடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். 

இந்த பதிவை சிற்றிதழ்கள் உலகத்திற்கு பிரத்தியேகமாக கொடுத்த அய்யா திரு.அ,நாகராசன் அவர்களுக்கு நன்றியை கானிக்கையாக்குகின்றேன்.  

வாழ்த்துக்கள் நண்பர்களே. படித்து உங்கள் கருத்தையும் பதிவு செய்யங்கள். 

உங்களிடம் இது போல நம் பார்வையிலிருந்து மறைந்து போன சிற்றிதழ்கள் இருப்பின் அனுப்புங்கள் நண்பர்களே. உலக வாசகர்கள் அறியட்டும்.

கிருஷ்.ராமதாஸ்,
08.06.2017.    

No comments:

Post a Comment