Translate

Wednesday, February 8, 2017

சிற்றிதழ் அறிமுகம் - ஓலைச்சுவடி

சிற்றிதழ் அறிமுகம்  - ஓலைச்சுவடி
ஒரு இளைஞனின் இதயத் துடிப்பு 
ஓலைச்சுவடி சிற்றிதழ்
ஆசிரியர் : கி.ச.திலீபன்.

வணக்கம் நண்பர்களே.
ஒரு இளைஞனின் இதயத் துடிப்பு, அதன் வீரியத்தையும், விவேகத்தையும், வெளிக் கொணரும் ஆற்றலையும், பெற்று விட்டால் அது வெடித்துச்  சிதறும்  எரிமலையாக எப்போது வேண்டுமானாலும் வரக்கூடும். அப்படித்தான் ஓலைச்சுவடி சிற்றிதழும் புதையுண்ட மலையிலிருந்து எரிமலையாக வெடித்து வெளி வந்துள்ளது.

2012ம் ஆண்டு இலக்கியத்  தாகத்துடன், தன் இருப்பை ஓலைச்சுவடி சிற்றிதழ் மூலம் இலக்கிய வெளியில் காலடி  வைத்தவர் தான் கி.ச.திலீபன். பொருளாதார சிக்கலால் முதல் இதழோடு மௌனித்து போனதன் வருத்தம் அவருடைய பதிவுகளில் காண முடிந்தது. நண்பர்களின் தீராத தூண்டுதல், நின்று போன இந்த நான்கு ஆண்டுகளில் தன்  பயணங்களும், சந்தித்த நண்பர்களும், எழுத்தாளுமைகளும்,  தந்த ஊக்கம், ஆலோசனை தன்னை மீண்டும் ஓலைச்சுவடி சிற்றிதழை இலக்கிய வெளிக்கு கொண்டுவரும் ஆர்வத்தையும், ஆசையையும் உருவாக்கியதாகவும் திலீபன் பதிவு செய்துள்ளார். பிரபல எழுத்தாளுமையும், இந்த ஆண்டின் சாகித்திய அகாடமி விருது பெற்ற அய்யா வண்ணதாசன் அவர்கள் குறிப்பிட்ட  " மீட்சியும் உயிர்த்தெழுதலுமே மேலதிக அர்த்தம் உடையது"  அந்த வார்த்தை எனக்கு முழு உந்துதலையும் கொடுத்ததாகவும் திலீபன், இதழின் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

பசுமை இலக்கியம் என்னும் சூழலியல் கருத்தை மையமாக வைத்து கட்டுரைகள் எழுதும் எழுத்தாளர் திரு.நக்கீரன் அவர்களின் நேர் காணல் மிகச்  சிறப்பான  கருத்து வெளிப்பாடாக அமைந்துள்ளது. அவர் எழுதிய காடோடி நாவல் குறித்து நீண்ட விளக்கங்களை அளித்துள்ளார். பழங்குடிகளின் வாழ்வியல் , காட்டில் உள்ள தாவரங்கள், உயிரினங்கள், வன அழிப்பு, சுரண்டல்கள் என்ற ஒரு விரிவான தளத்தைக் கொண்டு எழுதப்பட்ட நாவல் தான் காடோடி என்ற விளக்கத்தை திரு.நக்கீரன் அவர்கள் எடுத்துரைத்துள்ளார். மிகச் சிறப்பான உரையாடல். இன்றைய சுற்று சூழல் பிரச்சினைகளுக்கு மைய புள்ளியாக விளங்கும் வனப் பாதுகாப்பின் அவசியத்தையும் வலியுறுத்துகின்றார்.

அடுத்து திரு.பாமாயன் அவர்களின் கட்டுரை நிலமென்னும் நற்றாய் பூவுலகின் சுற்று சூழல் தாக்கங்கள் குறித்தானது. இயற்க்கையின் மீது தொடுக்கப்படும் தாக்குதலை மிகச் சிறப்பாக புள்ளி விபரங்களுடன் வெளிப்படுத்தி உள்ளார்.

வாமுகோமு, சு.வெங்குட்டுவன், ஷாராஜ், திருச்செந்தாழை முதலியவர்களின் கவிதைகள் சிறப்பாக உள்ளன.

மறைந்த திரு.க.சி.சிவக்குமாரின் நாலு  மூலைப்பெட்டி சிறுகதை அருமையாக உள்ளது. செம்பேன் உஸ்மான் அவர்களின் சிறுகதையும் வெளியாகி உள்ளது.

காவிரி.... கர்நாடகம்.... காடுகள் .. என்ற இரா.முருகவேள் அவர்களின் சூழலியல் கட்டுரை காவிரிப் பிரசிலையை விரிவாக அலசுகிறது. பு.மா.சரவணனின் மொழியில் உயிர் பெரும் கடல் கட்டுரையும்  சிறப்பாக உள்ளது. 
இறுதியாக தானாபதி நாவல் குறித்த நூல் விமரிசனமும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

சரியாக ஓலைச்சுவடி வெளிவந்து மூன்றாண்டுகளாகி விட்டன... ஓலைச்சுவடி கொண்டு வரப்போகிறேன் என்று சொன்னதும் பலரும் சொன்னார்கள்... ’’இன்றைய சூழலில் வெகுஜன பத்திரிக்கைகளின் விற்பனையே குதிரைக் கொம்பாக இருக்கும்போது சிறுபத்திரிக்கையில் என்ன வந்து விடப்போகிறது? தொடர்ந்து நடத்த முடியாதே...” அம்மாவின் செயினை அடகில் போட்டு பத்திரிக்கையைக் கொண்டு வந்தேன் என்றால் அன்றைய சிறு பத்திரிக்கைச் சூழலை அறியாமல் இல்லை. விடியவிடியக் கண் விழித்து லே அவுட் பார்த்தது, மணி ஆப்செட்டில் அச்சிட்டு முடித்ததும் இரண்டு அட்டைப்பெட்டிகளில் கொடுத்த புத்தகத்தை சென்னையிலிருந்து ஊருக்குக் கொண்டு வந்து, கடை கடையாகச் சென்று போட்டது வரை பல அனுபவங்களைக் கொடுத்தது ஓலைச்சுவடி... சாதாரண கடையில் கூட ஐந்து போட்டதில் மூன்று பிரதி விற்றிருந்தது. விற்பனை அளவில் தேக்கமடையாமல் நல்ல விற்பனையை எட்டியிருந்தாலும் பத்தாயிரம் ரூபாய் ஸ்வாகா ஆனது... ஏனெனில் ஒரு பிரதியின் விலை 15 ரூபாய், ஆனால் எனக்கு செலவானது ஒரு பிரதிக்கு 21 ரூபாய்... நட்டத்துக்குத்தான் விற்றேன். வந்த புதிதில் பலரும் போனில் அழைத்துப் பாராட்டினர்... சந்தா கட்ட வேண்டும் என்று கூட அழைப்பு வந்தது... இது மேற்கொண்டு ஸ்வாகாவாக்க என்னிடம் பைசாக்கள் இல்லாத காரணத்தால் ஓலைச்சுவடிக்கு பெரிய கும்பிடைப் போட்டு விட்டு விலகி விட்டேன். ஓலைச்சுவடியின் முதல் இதழே கடைசி இதழுமாகிப்போனது... பத்திரிக்கை நடத்துறேன்னு சொன்னதோட மட்டுமில்லாம செஞ்சுட்டோம்ல....

வா.மு. கோமுவின் என்னை மரணத்தின் வருகை என்கிறார்கள் சிறுகதைத் தொகுப்பில் ஓலைச்சுவடியில் வெளிவந்த ‘தொடர்வண்டி உறவுகள்” என்னும் சிறுகதை இடம்பெற்றுள்ளது என்பது உபரித் தகவல்...


நண்பர்களே, அருமையான சிற்றிதழ் ஓலைச்சுவடி . அவசியம் சந்தா கட்டி, வாங்கி படிக்க வேண்டிய இதழ் . முன்பே நான் குறிப்பிட்டது போல, இது ஒரு இளைஞனின் இதயத் துடிப்பு என்பதை நீங்களும் உணருவீர்கள். 
இந்த பதிவு ஒரு மாதத்திற்கு முன்பு நான் எழுத துவங்கியது. இடையில் ஜல்லிக் கட்டு, அரசியல் களேபரங்களின் ஆக்கிரமிப்பால் தாமதப்பட்டு வந்தது. இப்போதாவது பதிவு செய்ய வேண்டும் என்ற அவசரம்  காரணமாக நான் விரிவாக எழுதவில்லை. பிடிஎப் பிரதி அனுப்பிக் கொடுத்த தம்பி திலீபனுக்கு நன்றியை உரித்தாக்குகின்றேன்.

முகவரி : 

கி.ச.திலீபன்,
கை  பேசி என் : 8012185274
EMAIL : kisadhileepan@gmail.com

திலீபனுக்கு சிற்றிதழ்கள் உலகத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். வெற்றி உன் வசம் எப்போதும் இருக்கட்டும் என வாழ்த்துகின்றேன் நண்பா.  

கிருஷ்.ராமதாஸ், 
09.02.17.



4 comments:

  1. நண்பர் பரிசை சே.குமார் அவர்களின் மனசு தளத்தின் மூலம் தங்களின் தளத்திற்கு வருகை புரிந்துள்ளேன் ஐயா
    தங்களின் மாபெரும் பணி போற்றுதலுக்கு உரியது
    தங்களின் மின்னிதழினை எனக்கும் அனுப்பிட வேண்டுகின்றேன்
    எனது மின்னஞ்சல் முகவரி
    karanthaikj@gmail.com

    ReplyDelete
  2. திலீபன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. பரிவை குமார் பதிவு மூலமாக உங்களது சிற்றிதழ் உலகம் பற்றி அறிந்தேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete